×

இந்த வார விசேஷங்கள்

நாதமுனிகள் அவதார விழா
1.7.2023 – சனி

வைணவ ஆசாரிய பரம்பரையில் முதல் ஆச்சாரியார் ஸ்ரீநாத முனிகள். அவர் 1200 வருடங்களுக்கு முன்னால் நம் தமிழ்நாட்டில் காட்டுமன்னார்குடி என்னும் ஊரில் ஆனி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்தார். வைணவத்துக்கும், ஆழ்வார்களின் தமிழ் பாசுரங்களுக்கும், தமிழ் பண்ணிசைக்கும் நாடகக் கலைக்கும், அவர் செய்த சேவை அளப்பரியது.இசைக் கலையையும் நாடகக் கலையையும் வளர்ப்பதற்காக அவர் செய்த இன்னொரு முக்கியமான விஷயம் அரையர் சேவை.

அரையர் என்றால் தலைவன் என்று பொருள். திருமாலுக்கு அரையன் என்ற பெயர் உண்டு. ‘‘அன்றாயர் குல மக்களுக்கு அரையன் தன்னை’’ என்பது திருமங்கையாழ்வார் பாசுரம். அரையர், அறையர், விண்ணப்பம் செய்வார், பாடுவான், இசைக்காரர், தம்பிரான்மார் என்றெல்லாம் இவர்கள் அழைக்கப்படுகின்றனர். முக்கியமான உற்சவங்களில் ஆழ்வார் பாசுரங்களை இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழால் ஓதப்பட வேண்டும் என்பதற்காகவே, இம்மூன்று கலைகளையும் அறிந்த, அரையர் மரபை உண்டாக்கினார்.

நாதமுனிகள் தன் காலத்தில் உருவாக்கினார். திருக்கோயில் உற்சவர் முன் நடைபெறும் அரையர் சேவையின் போது அரையர்கள் பஞ்சகச்சம் அணிந்து, அரையர் குல்லாய் எனப்படும் கூம்பு வடிவத் தொப்பியும் இறைவனுக்குச் சாத்தப்பட்ட மாலையும் தனித் துவமாக அணிந்திருப்பர். காதுகளை மறைக்கும் வகையில் இரண்டு பட் டைகள் தொங்கும். குல்லாய் முழுவதும் சரிகை வேலைப்பாடுடன் அமைந்திருக்கும். அவர்களுக்கு பரம்பரையாக வந்த கைத் தாளமும் இத்தகு அரிய கலை வைணவக் கோயில்களில் மட்டும் காணப்படும்.

நாதமுனிகளின் அவதார உற்சவம் ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி, திருப்பதி முதலிய எல்லாக் கோயில்களிலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவதோடு ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள பஜனை மடங்களிலும், வைணவர்கள் இல்லங்களிலும் அனுசரிக்கப்படும்.

சனி மகா பிரதோஷம்
1.7.2023 – சனி

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4:30 முதல் 6:00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப் படுகிறது. இதில் சிறப்பு வாய்ந்த சனி மஹா பிரதோஷம், சிறப்பாக அனைத்து கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது. சனிப்பிரதோஷத்தன்று வழிபாடு செய்தால் ஓர் ஆண்டு முழுவதும் பிரதோஷ வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். இன்று சனிக்கிழமை. சனி பகவானுக்கு உரிய நாள் அதோடு இன்று அனுஷ நட்சத்திரம்.

சனி பகவானுக்கு உரிய நட்சத்திரம். இது தவிர இன்று பிரதோஷ நாள். இது மூன்றும் ஒன்றாகச் சேர்வது அபூர்வமானது. ‘‘பிற தோஷங்கள் நீங்க வேண்டு மானால் பிரதோஷ வழிபாடு செய்’’ என்று சொல்வார்கள். அதுவும் சனிக்கிழமை அன்று பிரதோஷ வழிபாடு செய்வதை மகா பிரதோஷ வழிபாடு என்று அழைப்பார்கள். அதுவும் ஆனி மாதத்தில் அதாவது தேவர்களின் மாலை நேரம், கிட்டத்தட்ட பிரதோஷ வேலை நேரத்தில் சனி மகா பிரதோஷம் வருவது இந்த ஆண்டில் மிக முக்கியமான ஒரு நிகழ்வு. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது சனி பிரதோஷம்.

ஆதியில் அமுதம் கடைந்த போது அதில் எழுந்த ஆலகால விடத்தை உண்ட சிவபெருமான் மீண்டும் எழுந்து ஆனந்தத் தாண்டவம் ஆடியது ஒரு சனிக்கிழமை திரயோதசி திதி தினம். சனிப்பிரதோஷ தினத்தன்று சிவ வழிபாடு செய்தால், அஷ்டமச் சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டமச்சனி, ஏழரை நாட்டுச் சனி, சனி திசை மற்றும் புத்திகள் தரும் கெடுபலன்களிலிருந்து நம்மைக் காத்துக் கொள் ளலாம். சிவபெருமானின் திருவடிவங்களில் ஒருவர் காலபைரவர்.

சனிபகவான் கால பைரவரை குருவாகக் கொண்டவர். எனவே சிவனை வழிபடுபவர்களை சனிபகவான் தொல்லை செய்வதில்லை. தான, தர்மங்களை செய்ய சனி பிரதோஷம் மிகவும் சிறந்த நாளாக கருதப்படுகிறது. இன்றைய நாளில் நீங்கள் செய்யும் சிறு தானம் கூட பெருமளவு பலன்களைக் கொடுக்கக் கூடியது.

நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா
1.7.2023 – சனி

திருநெல்வேலியில் மிகவும் பிரசித்தி பெற்ற பழைமையான சைவத் திருத்தலமாக நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயில் விளங்குகிறது. இந்தத் திருத்தலம் சுமார் 2,000 ஆண்டுகள் பழைமையானது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து சைவத் தொண்டாற்றிய திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற சைவத் தலம். இந்தக் கோயிலில் உள்ள மூலவர், `நெல்லையப்பர்’, `சுவாமி வேணுநாதர்’, `நெல்வேலி நாதர்’ என்று பல பெயர் களில் அழைக்கப்படுகிறார். இந்தக் கோயிலில் ஆனித் திருவிழாவும், ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழாவும் முக்கியமான வைபவங்களாக நடை பெற்றுவருகின்றன.

ஆனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக நடப்பது திருத் தேரோட்டம். விழாவின் 9-ம் நாளில் நடக்கும் இந்தக் தேரோட்டம் மிகச் சிறப்பானது. இக்கோயில் நெல்லையப்பர், அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் என ஐந்து தேர்கள் உள்ளன. இதில் நெல்லையப்பர் தேர் தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேர் என்னும் பெருமையைக் கொண்டதாகும். சுமார் 70 அடி உயரமும், 450 டன் எடையுடன் மிகவும் கம்பீரமாக இந்தத் தேர் காணப்படும். மிகச் சிறப்பான தேர் விழா இன்று.

அருணகிரிநாதர் குரு பூஜை
3.7.2023 – திங்கள்

இன்று ஆனி மூலம். அருணகிரிநாதர் குரு பூஜை. 5ஆம் நூற்றாண்டில் அவதரித்த ஒப்பற்ற அருளாளரான இவரின் குரு பூஜை தினம் வெகுகாலம் வரையில் அறியப் படாமலே இருந்து வந்தது. அதனைக் குமரக் கடவுளின் திருவருளால் கண்டறிந்து அறிவித்து அருளியவர் பாம்பன் மத் குமரகுருதாச சுவாமிகள். பாம்பன் சுவாமிகள் திருப்புகழ் பாடிய தமது குருநாதர் அருணகிரிநாதர் சுவாமிகட்கு குரு பூஜை நடத்தப்படாமை குறித்து வருந்தினார். தியான யோகத்தில் அமர்ந்து, அருணகிரிநாதர் முக்தி பெற்ற தினம் உத்தராயணம் கழிந்த ஆறாவது பௌர்ணமி என்று உணர்ந்தார்.

அருணகிரிநாதரின் குரு பூஜை தினம் ‘ஆனி மூலம்’ என்று வெளியிட்டு அருளிய பாம்பன் சுவாமிகள் தன் அவதாரக் காலத்தில் ‘அருணகிரியாரின் குரு பூஜைத் திருநாளை’ ஆலயங்கள் தோறும் கொண்டாடுமாறு செய்தருளினார். இன்று அருணகிரிநாதர் அருளிய இந்தப் பாடலைப் (கந்தர் அலங்காரம்) பாட முருகப்பெருமானின் அருள் கிடைக்கும்.

செங்கேழ் அடுத்த சின வடிவேலும் திருமுகமும்
பங்கே நிரைத்த நற்பன்னிரு தோளும்பதும மலர்க்
கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன் என
எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே!!!

வியாச பூஜை
3.7.2023-திங்கள்

இன்று பௌர்ணமி நாள். வியாச பௌர்ணமி என்று இன்றைய நாள் போற்றப்படுகிறது. வியாச பௌர்ணமி தொடங்கிய நாளிலிருந்து நான்கு மாதங்கள் மழைக்காலமாகும். இந்தக் காலகட்டத்தில் பல் வேறு ஜீவராசிகளும் இடம் பெயர்ந்து வாழுமாம். எனவே, இந்தக் காலகட்டத்தில் சந்நியாசிகள் அவற்றுக்குத் தொந்தரவு ஏற்படா வண்ணம் ஒரே இடத்தில் தங்கியிருப்பார்கள். இதனை சாதூர் மாஸ்ய பூஜை என்பார்கள்.

அதன் தொடக்க நாள் இன்று. சந்நியாசிகள் மட்டு மின்றி இல்லறத்தில் இருப்பவர்களும் கட்டாயம் இந்த நான்கு மாதமும் தினமும் ஒரு குறிப்பிட்ட கால அளவை நிர்ணயித்து 5 நிமிடம் முதல் அவரவர் வசதிக்கு ஏற்ப நேரம் ஒதுக்கி – இறைவனின் நாமத்தை தினமும் உச்சரித்து வந்தால் சகல துன்பங் களும் நீங்கும் என்பது ஐதீகம். குரு பூர்ணிமா நாள் என்ற பெருமை இந்த நாளுக்கு உண்டு. `ரிஷிகளில் நான் வியாசராக இருக்கிறேன்’ என்கிறார் கீதையில் பகவான் கிருஷ்ணர். “வியாசாய விஷ்ணு ரூபாயா” என்பது விஷ்ணு சஹஸ்ரநாமம். வியாசரை வேத வியாசர் என்று அழைப்பதுண்டு.

காரணம், அவர் வேதங்களைத் தொகுத்தார். ஐந்தாம் வேதம் எனப்படும் மகாபாரதம் எழுதினார் 18 புராணங்களும், பிரம்ம சூத்திரமும், ஸ்ரீமத் பாகவதமும் வியாசரால் அருளப்பட்டவையே. இன்று எளிய வியாச பூஜை செய்யலாம். பூஜை அறையில் விளக் கேற்றி வைத்து ஒரு பலகையில் கோலமிட்டு அதையே வியாசர் பீடமாகக் கருதி பூக்களைத் தூவி பூஜை செய்யுங்கள். முடிந்தால் நீங்கள் குருவாக கருதுபவரைச் சந்தியுங்கள். அவர் உங்கள் ஆசிரியரோ, உங்களை வழி நடத்தியவரோ, நல்ல ஆலோசனை சொல்பவரோ, யாராக இருந்தாலும் சரி, இதில் வயது கூட பொருட்படுத்த வேண்டாம்.

அவரிடம் சென்று வாழ்த்து தெரிவியுங்கள். வாழ்த்து பெறுங்கள். பரிசு பொருளை அளியுங்கள். வித்தைகளின் பலம் கூடும் புகழ் கிடைக்கும். நேரில் முடியாவிட்டாலும் தொலை பேசியில் வாழ்த்து தெரிவியுங்கள்.

திருவோண விரதம்
5.7.2023 – புதன்

இன்று மகாவிஷ்ணுவுக்குரிய புதன்கிழமை. திருவோணம். மகா விஷ்ணு திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தவர் என்பார்கள். குறிப்பாக வாமன அவதாரம் நிகழ்ந்தது திருவோணத்தில். ‘‘திரு வோணத்தான் உலகாளும் என்பர்களே’’ என்பது பெரியாழ்வார் வாக்கு. இந்த திருவோணத்தில் பெரும்பாலான திருமால் ஆலயங்களில் திருமஞ்சனம் நடைபெறும். சில இடங்களில் சுவாமி புறப்பாடும் உண்டு. இன்று விரதமிருந்து மகாவிஷ்ணுவுக்குரிய விஷ்ணு சஹஸ்ர நாமம் போன்ற தோத்திரங்களைப் படித்து, ஆழ்வார்களின் பாசுரங்களை ஓதி வழிபடுவதன் மூலமாக நாம் பல்வேறு நன்மைகளை அடையலாம்.

சங்கடஹர சதுர்த்தி
6.7.2023 – வியாழன்

எந்தத் தடைகளாக இருந்தாலும் அது விலகுவதற்கு விநாயகரை வழிபட வேண்டும். எந்தப் பூஜைகளிலும் அவருக்கு முதலிடம் உண்டு. சதுர்த்தி நாள் அவருக்குரிய விசேஷமான நாள். சங்கடங்களை எல்லாம் போக்குகின்ற நாள் என்பதால் சதுர்த்தி நாளில் விரதம் இருந்து, அருகம்புல் மாலையைச் சாற்றி, ஆனைமுகத் தோனை வணங்க வேண்டும். இன்று விரதம் இருந்து அருகில் உள்ள கணபதி கோயிலுக்குச் சென்று மாலையில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு, விரதத்தைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். இந்த விரதத்தினால் ஆயுள், ஆரோக்கியம் வளரும். இஷ்ட சித்திகள் அதாவது நம்முடைய எண்ணங்கள் பலிக்கும்.

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Nadamunis Incarnate Festival ,Srinath Munis ,Achariyar ,Sani ,Vainava ,
× RELATED பக்தனின் முற்பிறவி ஆசையை நிறைவேற்றிய சாய் பாபா..!!